கோவைக்கு சிறப்பு சேர்க்கும் ஈச்சனாரி விநாயகர்



கோவைக்கு சிறப்பு சேர்க்கும் ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில் - ஓர் சிறப்பு பார்வை

பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஆறு அடி உயரமும், மூன்று அடி விட்டமும் கொண்ட  இந்த விநாயகர் சிலை கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் ஸ்தாபனம் செய்வதற்காக செதுக்கப்பட்டது. மதுரையிலிருந்து கோவை பேரூர் ஆலயத்துக்கு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அந்த காலத்தில் ஈச்சமரக்காடாக இருந்த (இப்போது கோயிலில் வீற்றிருக்கும்) இடத்தில் வண்டியின் அச்சாணி முறிந்தது. வேறு வண்டி வரவழைக்கப்பட்டு தரையில் அமர்ந்துவிட்ட விநாயகர் சிலையை அதில் ஏற்றி கொண்டுபோக முயற்சி செய்தனர். எவ்வளவு பலப்பிரயோகம் செய்தும் சிலையை வேறு வண்டியில் ஏற்றமுடியவில்லை.   

பிறகு சிலை இருந்த அதே இடத்தில ஆலயம் கட்டப்பட்டு பக்தர்கள் வணங்கி வந்தனர். தொழிலதிபர் பொள்ளாச்சி, திரு நா. மகாலிங்கம் அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இப்போதுள்ள அழகிய தெய்வீக ஆலயம் கட்டப்பட்டு, 1977 ஆம் ஆண்டு ஆலய நிர்வாகம் தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறையிடம்  ஒப்படைக்கப்பட்டது.  

பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றுவதில் இந்த விநாயகருக்கு ஈடு இவரே தான். வேறு யாருமில்லை என்று சொல்லலாம்.

குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி நாளில் உங்கள் கோரிக்கையை ஈச்சனாரி விநாயகரிடம் மனதார வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு சங்கடஹர சதுர்த்தி நாளில்  108 தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டால் நிச்சயமாகப் பிரார்த்தனை நிறைவேறுமாம். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற ஈச்சனாரி விநாயகர் கண்கண்ட தெய்வம் என்று சொல்லலாம்.


நல்ல வேலை கிடைக்க, பதவி உயர்வு பெற, மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற, வியாபாரம் செழிக்க, நல்ல உடல் ஆரோக்கியம் பெற, வாழ்க்கையில் பிரச்சினைகள் தீர இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

இந்தப்பகுதியில் யார் புதிய வாகனங்கள் வாங்கினாலும் நல்லபடி இயங்க முதல் பயணம் இந்த ஈச்சனாரி விநாயகருக்குப் பூஜை செய்வதற்காகத்தான்.

இந்த ஆலயத்தில் நாள்தோறும் நடக்கும் விசேஷ பூஜைகள். காலை 05.30 மணிக்கு கணபதி ஹோமம், அதை அடுத்து 06.30 மணிக்கு அபிஷேகம், 07.00 மணிக்கு தீப ஆராதனை. மாலை 06.30 மணிக்கு அபிஷேகம்,  07.00 மணிக்கு தீப ஆராதனை. அதன் பிறகு 07.30 மணிக்கு விநாயகரைச் சுற்றி விஸ்தாரமான பிரகாரத்தில் தங்கத்தேர் உலா.


இந்தப் பூஜைகளுக்காக கட்டணம் செலுத்தும் உபய கட்டளைதாரர் குடும்பத்தினர் இருவர் தேர் இழுக்கலாம். இவை தவிர 27 நட்சத்திர நாட்களுக்கு  27 விதமான அலங்காரங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரம். ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதே நட்சத்திர நாளில் பூஜை செய்து ஈச்சனாரி விநாயகரின் அருளைப் பெறலாம்.


அருகம்புல் மாலை அலங்காரம், தங்கக் கிரீடம் அலங்காரம், வெள்ளிக்கவசம் அலங்காரம், சந்தன அலங்காரம், கஸ்தூரிமஞ்சள் அலங்காரம், காய்கறிகள் அலங்காரம், திருநீறு அலங்காரம், பழங்கள் அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், வெற்றிலை மாலை அலங்காரம் இப்படி நீள்கிறது பட்டியல்.


தமிழக அரசின் 'அன்னதானத் திட்டம்' 2002 ஆம்  ஆண்டு முதல் இங்கு நடைபெறுகிறது. தினமும் 100 பேருக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. 


திருக்கோயில் சார்பாக சமூகத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு இலவசத்திருமணம் செய்துவைக்கப்படுகிறது. திருக்கோயில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும். 


திருக்கோயில் அலுவலகம் காலை 10 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும். திருக்கோயில் அலுவலகத்தில் ஆன்மீக நூலகம் உள்ளது. அலுவலக நேரத்தில் பக்தர்கள் படித்துப் பயன் பெறலாம். 

அனைத்துப் பூஜைகள் மற்றும் இதர தகவல்களுக்கு 7502672000 என்ற திருக்கோயில் அலுவலக மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


மிகமிக தூய்மையான அமைதி தவழும் ஆலயம். பல வாகனங்கள் பரபரப்பாகசெல்லும் சாலையில்  பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்தாலும்கூட ஆலயத்தினுள் சென்ற உடனே மனதிற்குள் ஒரு நிம்மதி பிறக்கிறது. நேரில் சென்று கம்பீரமாகக் காட்சியளித்து  கருணை மிகுந்த பார்வையால் அருள்மழை பொழியும் விநாயகரை தரிசித்து உங்கள் வேண்டுதல் நிறைவேறப் பிரார்த்தனை செய்து  பயனடையுங்கள்.


______________________________________________________ சிவாய நம ___________


மகான் திருமூலர் அருட்குடில்,

ஈச்சனாரி, கோயம்புத்தூர்.

Mb:  96 88 56 86 55


Email: mahaanthirumoolar@gmail.com

https://www.facebook.com/mahaanthirumoolar

https://www.youtube.com/channel/UCGRiPCWcmQPu1Ei-0IJ3tJQ




கருத்துகள்